ஒரு காலத்தில்
அவன் என்
பிரியத்தின் பிரதிநிதி
நண்பன் என்னும் ஒற்றை வார்த்தைக்குள்
திணிக்க முடியாத தோழன்.
என் பள்ளிக்கூட நாட்களின்
பல்லாங்குழிச் சினேகிதன்.
தவளைக் குளத்தில் நீச்சலடித்து,
தூண்டில் நுனியில் மண்புழு சொருகி
ஓடைக்கரையில் மீன் பிடித்து,
அணில் மேல் கோடு வரைந்தது யாரென்று
விவாதம் செய்யும் பொழுதுகள் வரை
என் விரல் தொட்டே நடந்தவன்.
ஒரு
விடலைப்பருவத்தின் விளங்காப் பொழுதில்
காரணமே இல்லாமல் சண்டையிட்டோ ம்.
முகம் இறுக்கி கரம் முறுக்கி
முடிச்சிட்டு முடிச்சிட்டு
இருட்டுக்குள் தடுக்கி விழுந்த நிழலாய்
நட்பு நுனி தொலைந்தே போயிற்று.
கோபத்தின் கொடுக்குப்பிடிக்குள்
எங்கள் நெருங்கிய நேசத்தின்
தண்டுவடங்கள் உடைபட்டுத் தொங்கின.
ஒரு படி கீழே இறங்கி
நான் பேசியிருந்தால்
ஒரு மாடி உயரம் அவன் இறங்கியிருப்பான்.
அந்த பச்சைமர ஆணித்தடம்
வெட்டுத்தோற்றத்தில் கட்டாயம்
வெளிப்பட்டிருக்கக் கூடும்.
ஆனால் பேசவில்லை.
வாலிபத்தின் சாலை முடிந்து
நடுவயதின் சந்தும் முடிவுற்று
முதுமையின் ஒற்றையடிப்பாதை வரை,
அவனோடு பேச விடவில்லை
பாழாய்ப்போன இந்த வறட்டுக் கொரவம்.
யுகத்தைக் கிழித்துக் கொட்டிய
என் குப்பைக்கூடையில்
என் ஆணவத்தின் அணிகலன்கள்
இன்று அறுந்து கிடக்கின்றன
என் நினைவுகளிடையே பீறிட்டுக் கிளம்பும்
இன்றைய நேசத்தின் ஓரிழை
நேற்று மாலையேனும் கசிந்திருந்தால்,
என்
பால்யகால பச்சைக்கிளைகளுக்கு
அவனோடு ஒருமுறை பறந்திருக்கக் கூடும்.
நேற்றிரவு
மரணம் அவனைச் சந்திக்கும் முன்
ஒருமுறையேனும் அவனோடு அழுதிருக்கக்கூடும்.
Regards
kailash
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக