புதன், 30 ஜூலை, 2008

Thangam

எப்போதும்போல் இன்றைக்கும் காலை தினசரிகளைக் கையில் எடுத்தவுடன், நான் பார்த்த தலைப்புச் செய்திகளே, என்னை மலைப்புச் செய்திகளாக மாற்றிவிட்டன.
எப்போதும் அரசியல் தலைப்பையே படித்துப் பழகிப் போயிருந்த எனக்கு, ‘தங்கத்தின் விலை பத்தாயிரம் ரூபாயைத் தாண்டியது’ என்ற தலைப்பே மறுபடியும் என்னைப் படுக்க வைத்துவிட்டது.
இன்றுவரையிலும் ஒரு குண்டுமணி தங்கம்கூட உடலில் ஒட்டாத அளவுக்கு வாழ்க்கையில் ராசியுடையவன் நான். என்றாவது ஒரு நாளாச்சும் ஒரு மோதிரமாவது வாங்கிக் கையில் போட வேண்டும் என்ற சின்னப்புள்ளைத்தனமான ஆசை மட்டுமே எனக்குள் உண்டு.
இனி அந்த மாதிரி ஆசையையெல்லாம் அப்படியே மனசுக்குள்ள கும்மிவிட்டு தங்கத்தில் குளித்திருப்பவர்களைப் பார்த்து பெருமூச்சுவிட்டு வாழ்க்கையை ஓட்டிவிடணும்போல இருக்கிறது இன்றைய தினசரிகளில் வெளிவந்திருக்கும் தங்கம் பற்றியச் செய்திக் கட்டுரைகள்.
இனி தினசரி செய்திக் கட்டுரைகளுக்குள் செல்வோம்.
“தங்கத்தின் விலை இன்றைக்கு முதன்முறையாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூபாய் 10,040 ஆக உயர்ந்துள்ளது. கிராம் விலை ரூ.1255 ஆக இருந்தது.
22 காரட் தங்கத்தின் விலை சென்னை சந்தையில் ஒரு கிராமுக்கு நேற்று ரூ.1253 ஆக உயர்ந்தது. இதன் மூலம் பவுனுக்கு ரூ.360 உயர்ந்து உச்சபட்சமாக 10,040 ரூபாய் அளவுக்கு உயர்ந்து, இறுதியில் ஒரு பவுன் விலை ரூ.10024 ஆக இருந்தது.
சமீப காலமாக தங்கத்தின் விலை தினமும் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதற்குச் சில காரணங்களை இந்தத் தொழிலில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.
முதல் காரணம்... பங்குச் சந்தை வீழ்ச்சி. அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தேக்க நிலை காரணமாக அங்கு பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இரண்டு.. அமெரிக்க கடன் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக உள்ளது.
இதனால் மற்ற நாடுகளில் முதலீடு செய்துள்ள அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை விலக்கிக் கொள்ளும்போது இந்தியா போன்ற நாடுகளிலும் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்படுகிறது.
இதன் காரணமாக பங்கு முதலீட்டாளர்கள் தங்கத்தில் பெருமளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
மூன்று... தென் ஆப்ரிக்காவில் கடுமையான மின்வெட்டு காரணமாக தங்கம் வெட்டி எடுப்பது பெரிதும் பாதித்துள்ளது. இதனால் உற்பத்தி பெருமளவு குறையத் தொடங்கியுள்ளது.
தேவை அதிகமாக வரும்போது உற்பத்தியில் சரிவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், தங்கம் தேவைப்படும் தொழில் துறையினரும், தங்க நகை உற்பத்தியாளர்களும் இப்போதே தங்கத்தை அதிகம் வாங்கி ஸ்டாக் வைக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
நான்கு... டாலரின் மதிப்பு குறைந்து வருவதால் அன்னியச் செலாவணி அதிகம் வைத்திருக்கும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றன.
பெரிய நாடுகளே அதிக அளவில் தங்கக் கட்டிகளை வாங்கிக் குவித்து வருவதால், உற்பத்தியைவிடவும் தங்கத்தின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஐந்து... கச்சா எண்ணெய்-தங்கத்தின் மதிப்பு இவை இரண்டும் 15:1 என்ற விகிதத்தில் இருந்து வந்தது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலைக்கு 15 பேரல் எண்ணெய் நிகராக இருந்தது. அது சமீபத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் 9:1 ஆகிவிட்டது. அது மீண்டும் 15:1 ஆகும்வகையில் தங்கத்தின் விலை எகிறுகிறது.
ஆறு... வீட்டுக் கடன் சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய நஷ்டம் காரணமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வங்கி திவாலாகி வருகிறதாம்.
100 டாலர் இருந்த வங்கிப் பங்குகளின் மதிப்பு 2 டாலராகச் சரிந்துள்ளதாம். இதனால் வந்த விலைக்கு பங்குகளை விற்றுவிட்டு, தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள் அமெரிக்க முதலீட்டாளர்கள்.
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் நேற்று 30 பைசா சரிந்துள்ளது. பொதுவாக இது போன்ற நிலைமை வந்தால் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் கூடுமாம்..
இவைகளைத்தான் தற்போதைய திடீர் தங்கத்தின் விலையுயர்வுக்குக் காரணமாகச் சொல்கிறார்கள்.
யார் என்ன காரணம் சொன்னால் என்ன?
மரத்தில் தொங்கும் முருங்கைக்காயின் விலையே கைக்கு எட்டாமல் மேலே, மேலே போய்க் கொண்டிருக்க.. பூமிக்குள் கண்ணுக்குச் சிக்காமல் அமிழ்ந்து கிடக்கும் தங்கத்தின் விலை மட்டும் கைக்கு சிக்கிவிடுமா என்ன..?
‘விலையைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல!’ என்ற பெருமையுடையை அந்தத் தங்கம் பற்றிய சில விபரங்களைப் பார்ப்போம்..
தங்கம் தரத்தின் அடிப்படையில்தான் அளவிடப்படுகிறதாம். இந்த அழகின், ‘அலகின்’ பெயர் ‘காரட்’. அதனை சதவீத அடிப்படையில் பிரித்திருக்கிறார்கள்.
24 கேரட் என்பது 100 சதம்.
22 கேரட் 91.75 சதம்.
18 காரட் 75 சதம்.
14 காரட் 58.5 சதம்.
12 காரட் 50.25 சதம்,
10 காரட் 42 சதம்,
9 காரட் 37.8 சதம்,
8 காரட் 33.75 சதம்
என்று தரம் பிரித்திருக்கிறார்கள்.
பல்வேறு நாடுகளில் இந்தத் தரம் வித்தியாசப்படுகிறதாம்.
இந்தியா, இலங்கை, அரபு நாடுகள் - இவற்றில் 22 காரட்
சீனா, ஹாங்காங், தைவான் - இவற்றில் 24 காரட்
வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் - இவற்றில் 21 காரட்
தெற்கு ஐரோப்பிய நாடுகள் - இவற்றில் 18 காரட்
ரஷ்யாவில் - 14 காரட்
அமெரிக்கா, வடக்கு ஐரோப்பிய நாடுகளில் 8 முதல் 18 காரட்
என்று அளவிடப்படுகிறதாம்.
உலகம் முழுவதும் தங்கம் விற்பனை செய்யப்பட்டாலும் லண்டன் உலோகச் சந்தையில்தான் தங்கத்தின் விலை முடிவு செய்யப்படுகிறது.
லண்டனின் கரன்சி, ‘பவுன்ட்’ ஆக இருந்தாலும், ‘டாலரில்’தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
தங்கத்துக்கான தேவை மற்றும் இருப்பின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஒரு அவுன்ஸ் விலை இவ்வளவுதான் என நிர்ணயம் செய்கின்றனர். அதை பவுனுக்கும், கிராமுக்கும் மாற்றி ஒவ்வொரு நாட்டிலும் விலையை முடிவு செய்கின்றனராம். ஒரு அவுன்ஸ் என்பது 31.10 கிராம் கொண்டதாம்.
தங்கம் நகை செய்ய மட்டும் பயன்படுவதில்லை. செல்போன் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் தயாரிப்பு, தங்கப்பல், மருந்து தயாரிப்பு என பல துறைகளிலும் தங்கம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
1933ம் ஆண்டு நிலவரப்படி 71 சதவிகிதம் தங்க நகை செய்யவும், 22 சதவிகிதம் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் செய்யவும், தங்கப் பல் செய்ய 7 சதவிகிதம் தங்கமும் பயன்படுத்தப்பட்டது.
இப்போது நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்புக்கான தங்கத்தின் தேவை, நகை தயாரிப்பையும் மிஞ்சிவிட்டதாம்.
தங்க நகை தயாரிப்பு குறைந்து, முதலீட்டுக்கான தங்க நாணயங்களும், தங்க பிஸ்கட்டுகளும் அதிகம் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தங்கத்தில் முதலீடு செய்வதிலும், நகை மீதான மோகத்திலும் எப்போதுமே இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது.
2. அமெரிக்கா
3. சீனா
4. சவுதி அரேபியா
5.வளைகுடா நாடுகள்
6.துருக்கி
7.இந்தோனேசியா
8.எகிப்து
- இப்படி வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன தங்கப் பித்துள்ள நாடுகள்.
தங்கத்தின் உற்பத்தியில் 1991-ம் ஆண்டுவரை சோவியத் யூனியன்தான் முதலிடத்தில் இருந்ததாம்.
சோவியத் பல நாடுகளாக உடைந்து சிதறிய பிறகு, தென்னாப்பிரிக்கா முதலிடத்தைப் பிடித்தது. 2007-வரை தென்னாப்பிரிக்காதான் தங்க உற்பத்தியில் கோலோச்சி வந்தது. இந்த ஆண்டில் அந்த முதலிடத்தை சீனா பிடித்துள்ளதாம்.
தங்கத்தின் உற்பத்தியில் உலக நாடுகளின் பங்காக பார்த்தால்,
சீனா 11.3 சதவீதமும்,
தென் ஆப்ரிக்கா 11.1 சதவீதமும்,
அமெரிக்கா 10.4 சதவீதமும்,
ஆஸ்திரேலியா 10.3 சதவீதமும்,
இந்தோனேஷியா 7 சதவீதமும்,
பெரு 6.9 சதவீதமும்,
ரஷ்யா 6.2 சதவீதமும்,
கனடா 3.8 சதவீதமும்,
மற்ற நாடுகள் 33 சதவீதமும்
கொண்டுள்ளன.
இதுவரை வெட்டி எடுக்கப்பட்டுள்ள 1.58 லட்சம் டன் தங்கத்தில் 65 சதவிகிதம் 1950-க்குப் பின் கிடைத்தவைதானாம்.
பப்புவா நியூகினியா என்ற நாட்டில் ஒரு தங்கச் சுரங்கம் இருக்கிறது. அங்குள்ள தங்கச் சுரங்கத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 2 லட்சம் டன் குப்பைகளும் வெட்டி எடுக்கப்படுகின்றன.
ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளில் உள்ள எல்லா நகரங்களிலும் ஒரு நாளைக்குச் சேரும் குப்பையைவிட இது அதிகம்.
இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு மோதிரத்துக்குத் தேவையான தங்கத்துக்காக 20 லட்சம் டன் குப்பை வெளியே எடுக்கப்படுகிறதாம்.
இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்த அமோக வளர்ச்சியை கீழே காணுங்கள்..
1920- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.21.00
1930- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.14.80
1931- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.21.00
1936- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.24.62
1940- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ 29.20
1945- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.49.60
1950- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.79.36
1954- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.58.00
1960- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ. 89.70
1961- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.104.00
1969- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.150.00
1970- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.147.20
1971- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.156.00
1972- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.200.00
1974- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.392.00
1975- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.408.00
1976- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.424.00
1977- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.488.00
1978- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.602.00
1979- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.996.00
1980- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,064.00 & ரூ.1,136.00
1981- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,304.00
1982- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,342.00
1983- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,368.00
1984- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,454.00
1985- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,544.00
1986- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,652.00
1987- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.2,016.00
1990- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.2,720.00
1991- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,472.00
1992- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,552.00
1994- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,584.00
1995- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,744.00
1996- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.4,000.00
1997- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,400.00
1999- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,424.00
2000- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,504.00
2001- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,368.00
2002- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,392.00
2003- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.4,152.00
2005- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.4,696.00 & ரூ.4,964.00
2006- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.6,144.00 & ரூ.6,824.00
2007- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.7,516.00
2008- ம் ஆண்டில் 1 பவுன் விலை ஜனவரி-4 ரூ.8,072.00
2008- ம் ஆண்டில் 1 பவுன் விலை பிப்ரவரி-9 ரூ.8,644.00
2008-மார்ச்-1 ரூ.9264.00
2008-மார்ச்-15 ரூ.9640.00
2008-மார்ச்-17 ரூ.10,024.00
இந்த வகையில் வருடாவருடம் மக்கள் தொகையைப் போலவே தங்கமும் மக்களோடு, மக்களாக உயர்ந்து கொண்டேதான் வந்திருக்கிறது.
இந்தியாவில் குவிந்திருக்கும் தங்கத்தின் மதிப்பு 16.29 லட்சம் கோடி என்று கணக்கிட்டுள்ளார்கள்.
இந்தியாவில் பெண்களின் முதல் விருப்பமான தங்க நகைகள் கையில், கழுத்தில், காலில் கிடந்து அவர்களுக்கு அலங்காரமாகத் திகழ்கிறது.
மனிதர்கள் மட்டும் போட்டால் போதுமா? சாமிக்கு வேண்டாமா? சாமிக்கும் ஏதாவது செஞ்சாத்தானே அது நம்மை பத்திரமா பாத்துக்கும் என்ற பேராசையில் பக்தன் தனக்கும் கடவுளுக்கும் இடையில் ஒரு கொடுக்கல், வாங்கல் என்ற அக்ரிமெண்ட்டை பத்திரப் பதிவு செய்யாமல் ஏற்படுத்திக் கொண்டு நகைகளை அள்ளிவிட..
இன்றைக்கு இந்தியாவில் இருக்கின்ற அத்தனை கோவில்களிலும் குடி கொண்டிருக்கும் சாமிகள்தான் நிறைய தங்கத்தை ஸ்டாக் வைத்திருக்கிறார்கள். வாழ்க சாமிகள்..
அதோடு கூடவே, கோவிலில் குடி கொண்டிருக்கும் எல்லா சாமியும் “எனக்குத் தங்கத்துல கோபுரம் கட்டலைன்னா உன் கண்ணு முழியைத் தோண்டிருவேன்”னு எல்லா கோவில்காரங்க கனவுலேயும் வந்து சொல்லுச்சாம். அதான் ஊர், ஊருக்கு, மாநிலத்துக்கு மாநிலம் தங்கத்தாலேயே கோபுரம் கட்டி வெச்சு புண்ணியம் சேரத்துட்டாங்க..
ஏதாவது செஞ்சாவது தன்கிட்ட காசு இருக்கிறதை காட்டணும்னு நினைச்சு தங்கத்தால் பல் கட்டிக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
இந்தத் தங்கத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தால் அபூர்வமாகக் கிடைக்கக் கூடியது என்பதால்தான் தங்கத்துக்கு மதிப்பு.
அதோடு கூடவே இன்னொரு சிறப்புமுண்டு.
ஒரு கிராம் தங்கத்தைக் கொண்டு உங்கள் வீட்டு மேஜை மீது போடும் விரிப்பு அளவுக்கு ஒரு தகடு செய்திட முடியுமாம்.
இது மதிப்புமிக்கது என்பதனால், மனித நாகரிகம் உருவான காலத்தில் இருந்தே இதற்காக அடித்துக் கொண்டவர்கள் அதிகம்.
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை மூன்றும்தான் பெரும்பாலான போர்களுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன.
அலாவுதீன் கில்ஜியில் இருந்து, நேற்று அமைந்தகரையில் பிடிபட்ட செயின் திருடன்வரை அனைவருக்கும் ஒரே நோக்கம்தான் கொள்ளை.. அதிலும் தங்கத்தை..
இப்போதும் உலகம் முழுவதும் அன்றாடம் நடைபெறும் பெரும்பாலான திருட்டு, கொள்ளை, கொலை சம்பவங்களின் பின்னணியில் நம்முடைய தங்கம்தான் காரணமாக இருந்திருக்கிறது.
தங்கத்தின் மீது தீராத மோகம் கொண்ட இந்தியர்களும் தங்கத்தை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நகைக்காக வாங்குவோரைக் காட்டிலும் பதுக்கல்காரர்களும், கறுப்பு பண முதலைகளும் தங்கள் கையிருப்பை தங்கமாக மாற்றி, பதுக்கி வைப்பதுதான் அதிகம்.
ஆண்டுக்கு 950 டன் தங்கத்தை இந்தியர்கள் வாங்குகின்றனராம்.
உலகம் முழுவதும் 1,45,000 டன் தங்கம் இருப்பதாக தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 13,000 டன் தங்கம் இருப்பது இந்தியாவில்.
இன்றைய விலை நிலவரத்தில் இதன் மதிப்பு 16,28,900 கோடி ரூபாய்.
ஆத்தாடி.. இதில் பெரும்பாலான தங்கம், எதற்கும் பயனில்லாமல் பரணில், பஞ்சு மெத்தைகளுக்குள், பீரோக்களுக்குள், வங்கி, லாக்கர்களுக்குள் சுகமாய் முடங்கிக் கிடக்கிறது.
யார் சொன்னது இந்தியாவா ஏழை நாடுன்னு..? அடப் போங்கப்பா..!

Regards
kailash

கருத்துகள் இல்லை: