again and agian
உனக்கும் எனக்கும் ஒரே வயது
இருவருக்குமாய் சேர்ந்து
உள்ளுக்குள்
இருப்பது கூட ஒரே மனது தான்.
நான் எழுதி முடிக்கும் கவிதைகளை
நீ தான்
முதலில் படிக்க வேண்டுமென்று
முதல் வரி எழுதும் போதே முடிவெடுப்பேன்.
என் வீட்டுத் தொலைபேசி
ஊமையாய் இருக்கும் போது
உன்
தொலை பேசி பேசுவதில்லை.
ஒரே குடையில்
மழைக்கு ஒதுங்கியதுண்டு,
ஒரே ஓடையில்
நனைந்து கரைந்ததுமுண்டு.
உன்னோடு பேசியதில்
எனக்குள்
மறைக்கப்பட்ட பக்கங்கள்
குறைக்கப்பட்டிருக்கின்றன.
எப்போதுமே
நட்பு என்னும் விமானத்திலிருந்து
வெளியே குதித்ததில்லை நான்..
நீயும் தான்.
உங்களுக்குள்ளே என்ன என்று
எங்களுக்குத் தெரியுமென்று
தங்களுக்குள்ளே தர்க்கமிடும் மக்களிடம்
விளக்கவுரை சொன்னதில்லை
நீயும்.. நானும்.
காதலெனும் வலை கொண்டு
நம் கால்களை
நாமே கட்டிக் கொண்டதில்லை.
சிலந்தி வலைகளில் சிக்கிக் கொள்ளாத
கானகமாகவே இருக்கிறோம்.
இல்லை என்று நாம் சொன்னதற்கு
ஆம் என்ற அர்த்தம் இருந்ததில்லை.
மொழி பெயர்ப்பிலோ
பேசும் விழி பெயர்ப்பிலோ
பொருள் குற்றங்கள் புரிந்ததில்லை நாம்.
பனிக்கட்டிகளைத்
தின்னத்தந்தாலும்
தீக்கோழிகளாகவே திரிகிறோம்,
தீ மிதிக்கச் சொன்னவர்களுக்கெல்லாம்
சின்னச் சிரிப்பொன்றையே
சலுகையாய் சரித்திருக்கிறோம்.
எந்தப் பருவங்களிலும் நமக்குள்
நட்பின் பருவ மழை பொய்த்ததில்ல.
எந்த பருவ மழையும்
நம் எந்தக் கரையையும் கரைக்கவுமில்லை.
காலை வணக்கம் சொல்லித் துவங்கும்
என் பொழுது,
இரவு வணக்கம் நீ சொன்ன பின்பு தான்
மெல்ல மெல்ல மறையத் துவங்கும்.
காதலுக்குள் வலி கலந்தே இருக்கிறது.
நட்போ
நிழலைக் கூட
வலி கொள்ள விடுவதில்லை.
நட்பின் கடைசி நிலை காதல் தானாம்.
அப்படியென்றால்,
கடைசி நிலையே வேண்டாமென்று தான்
கைகோர்த்து வேண்டிக் கொள்வோம்.
நீயும்… நானும்.
Regards
Kailash
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக